search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய சட்ட ஆணையம்"

    நாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை குறித்து தேசிய சட்ட ஆணையம் நேற்று 2-வது நாளாக கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தியது.
    புதுடெல்லி:

    ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ள தேசிய சட்ட ஆணையம், இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு அறிய முடிவு செய்தது.

    இது தொடர்பான 2 நாள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் உள்ள சட்ட ஆணைய அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் பிரதிநிதிகள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    நேற்று 2-வது நாளாக சட்ட ஆணையத்தின் தலைவர் பல்பீர் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவித்தனர்.

    நேற்றைய கூட்டத்தில் தி.மு.க. சார்பில் கலந்து கொண்ட திருச்சி சிவா எம்.பி. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு தங்கள் கட்சியின் எதிர்ப்பை தெரிவித்தார்.

    இதுபற்றி பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விஷயத்தில் தி.மு.க.வின் நிலை என்ன? என்பது பற்றி செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்ட ஆணையத்துக்கு ஒரு கடிதம் தந்துள்ளார். அந்த கடிதத்தை நான் வழங்கி தி.மு.க.வின் நிலையை விளக்கினேன்.

    ஒரே நேரத்தில் தேர்தல் என்பதை தி.மு.க. கொள்கை அளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியாவில் அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி மாநில அரசை மத்திய அரசு எந்த நேரத்திலும் கலைக்கலாம் என்ற நிலை உள்ளது. சில வழக்குகளில் தீர்ப்பு மாறி வந்திருந்தாலும் கூட இந்த பிரிவை எந்த நேரத்திலும் பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

    மேலும் மக்களவையும் தொடர்ந்து 5 ஆண்டுகள் செயல்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதற்கு முன்பு பல அரசுகள் கவிழ்ந்ததை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும். அப்படி மக்களவை கலைக்கப்பட்டால் எல்லா மாநில சட்டசபைகளையும் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவார்களா? என்றும் கேள்வி எழுகிறது. எனவே, இந்த முயற்சியால் ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படும்.

    இவ்வாறு திருச்சி சிவா கூறினார்.

    இதேபோல் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதிகளும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுபற்றி அக்கட்சியின் சார்பில் கூட்டத்தில் பங்குகொண்ட மூத்த தலைவர் ஆஷிஷ் கேதான் டுவிட்டரில் தெரிவித்துள்ள கருத்தில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பாராளுமன்ற ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானது என்றும், இது தொடர்பாக சட்ட ஆணையத்திடம் தங்கள் கட்சி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். 
    நாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனை குறித்து அரசியல் கட்சிகளின் பிரதி நிதிகளுடன் தேசிய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது. #OneNationOneElection #LawCommission
    புதுடெல்லி:

    ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்தியில் உள்ள பாரதீய ஜனதா அரசு யோசனை தெரிவித்து உள்ளது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் நிறைய செலவு மிச்சமாகும், காலவிரயமும் தவிர்க்கப்படும் என்றும், வளர்ச்சிப்பணிகளில் அரசு கவனம் செலுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

    மத்திய அரசின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என்று பரிந்துரைத்துள்ள தேசிய சட்ட ஆணையம், இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய வேண்டும் என்று யோசனை தெரிவித்து இருக்கிறது.

    ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு அ.தி. மு.க., திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றன. பிஜூ ஜனதாதளம், போடோலாந்து மக்கள் முன்னணி உள்ளிட்ட சில கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.

    நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்றால், சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.

    ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களை நடத்தும் பிரச்சினை தொடர்பாக தேசிய சட்ட ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டு இருந்தது. அதன்படி கட்சிகள் தங்கள் கருத்துகளை கடிதம் மூலம் சட்ட ஆணையத்துக்கு அனுப்பி வைத்தன.

    இந்த நிலையில், இந்த பிரச்சினை குறித்து அனைத்துக்கட்சிகளுடனும் 2 நாட்கள் ஆலோசனை நடத்த முடிவு செய்த சட்ட ஆணையம், இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகளுக்கும், 59 மாநில கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து இருந்தது. அதன்படி சட்ட ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது.

    தேசிய சட்ட ஆணையத்தின் தலைவர் பல்பீர் சிங் சவுகான் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சிரோமணி அகாலிதளம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.

    அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், நாடாளுமன்ற அ.தி.மு.க. தலைவர் டாக்டர் வேணுகோபால், எம்.பி.க்கள் டாக்டர் மைத்ரேயன், நவநீத கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை இவர்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த கால வரையறையில் அவர்கள் தங்கள் கருத்துகளை எடுத் துரைத்தனர்.

    கூட்டம் முடிந்த பின்னர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாடாளுமன்றம், சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் திட்டம் எந்த ஆண்டில் இருந்து தொடங்கும்? என்று நாங்கள் கேள்வி கேட்டோம். அவர்கள் அதற்கு சரியான பதிலை தரவில்லை. இது ஒரு தொடக்கம் என்றுதான் அவர்கள் கூறினர். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்று நாங்கள் சொன்னோம்.

    ஏனென்றால் 5 ஆண்டுகள் பணியாற்ற மக்கள் எங்களுக்கு வாக்கு அளித்து இருக்கிறார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. வேண்டுமென்றால், போதிய அவகாசம் கொடுத்து, எல்லா கட்சிகள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டால் 2024-ம் ஆண்டு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தலாம் என்று கூறினோம்.

    அமெரிக்காவைப் போல, நாடாளுமன்றத்துக்கு ஒருமுறை, அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒருமுறை என்று இருமுறை தேர்தலை நடத்தலாம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2 தேர்தல்களை நடத்தலாம்.

    இவ்வாறு தம்பிதுரை கூறினார்.

    கூட்டம் முடிந்து வெளியே வந்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி நிருபர்களிடம் பேசுகையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் இல்லாதது என்ற தங்கள் கட்சியின் கருத்தை கூட்டத்தில் தெரிவித்ததாக கூறினார். மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ உள்ள கூட்டணி அரசு கவிழ்ந்துவிட்டால் ஓரிரு ஆண்டுகளிலேயே ஒட்டுமொத்த தேசத்துக்கும் தேர்தல் நடத்த வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான கோவா பார்வர்டு கட்சியின் தலைவர் விஜய் சர்தேசாய் நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கும், அரசியல் சாசனத்தின் அடிப்படை அம்சங்களுக்கும் எதிரானது என்றார். ஒரு மாநில முதல்-மந்திரி சட்டசபையை கலைக்குமாறு சிபாரிசு செய்தால் என்ன ஆகும்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

    விஜய் சர்தேசாய் கோவா மாநிலத்தில் அமைந்துள்ள பாரதீய ஜனதா-கோவா பார்வர்டு கூட்டணி அரசில் வேளாண்மை துறை மந்திரியாக இருக்கிறார்.

    நேற்றைய கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதாவின் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதளம் ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

    2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேசிய சட்ட ஆணையம் ஆலோசனை நடத்துகிறது.

    இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா, தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கிறார்கள்.  #OneNationOneElection #LawCommission  #tamilnews
    ×